சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால், பழமைவாத எண்ணங்களுடன் இருந்து வந்த சவுதி அரேபியாவில் பல முற்போக்கான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
இதுவரை தடை விதிக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2018ம் ஆண்டு பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2019ம் ஆண்டில் ஒரு ஆண் உறவினரின் அனுமதியின்றி பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. மேலும், சவுதி அரேபியாவில் 100 பெண்கள் பொது நோட்டரிகளாக நியமிக்கப்பட்டனர். விரைவில் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தற்போது மற்றொரு கட்டுப்பாடு உடைக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபிய பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, சவுதி அரேபிய பெண்கள், ராணுவம், விமானப்படை, கடற்படை, ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.