பென் ஸ்டோக்ஸின் அட்டகாசமான சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறாத நிலையில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் விதமாக அமைந்துள்ளது. நேற்று மாலை துபாயில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே பேக் டூ ஃபார்முக்கு திரும்பியது.
இதைத்தொடர்ந்து அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. மும்பை அணி 10 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்றதால் இப்போட்டியில் வென்றால் பிளே ஆஃப் உறுதி. மறுமுனையில் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் எட்டு புள்ளிகளை பெற்றதால் மீதுமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்த சூழலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. ஒருகட்டத்தில் 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசத்தால் ஐந்து விக்கெட்கள் இழந்து 195 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஏழு சிக்சர் என 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தது தனது இயல்பான ஃபார்முக்கு திரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.
இதன்பின் 196 ரன்கள் என்னும் கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது ஓவரிலேயே உத்தாப்பா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட நான்கு பவுண்டரிகளை விளாசி அதகளப்படுத்தினார் பென் ஸ்டோக்ஸ். மறுமுனையில் பும்ராவின் நான்காவது ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஸ்டீவ் ஸ்மித் அடுத்து பேட்டின்சன் ஓவரில் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்தது. அப்போது சஞ்சு சாம்சனுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் ராகுல் சஹார், குருனல் பாண்டியா ஆகியோரை செட்டில் ஆகாவிடாமல் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் பொல்லார்ட் வீசிய ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அதிரடி காட்டத் தொடங்கினார். இருவரும் அணிக்கு தேவையான ரன்ரேட் 10 அல்லது அதற்கு கீழ் வைத்திருந்தினர்.
தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் தனது 28ஆவது பந்தில் அரை சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். இருப்பினும் தனது வேலை பாதிதான் முடிந்தது இன்னும் ஆட்டத்தை முடித்தி தரவேண்டும் என்பதை உணர்ந்து பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அமர்க்களப்படுத்தினார். மறுபக்கம் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் தன் 27 ஆவது பந்தில் அரை சதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் மூன்றாவது அரை சதம் இதுவாகும்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை நெருங்கியபோது 19ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து ஐபிஎல்லில் தனது இரண்டாவது சத்தத்தை எட்டினார் பென் ஸ்டோக்ஸ். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ராஜஸ்தான் அணி 18.2 ஓவரில் 196 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் அபாரமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 14 பவுண்டரி, மூன்று சிக்சர் என 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை மிடில் ஆர்டரில் களமிறங்கி மேட்சை ஃபினிஷ் செய்து வந்த அவர் இம்முறை தன்னால் ஓப்பனிங்கிலும் இறங்கி மேட்சை ஃபினிஷ் செய்து தர முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.இந்த வெற்றியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.