ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏழு போட்டிகளில் ஆடி புள்ளிகள் பட்டியலில் இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆறு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி இந்த போட்டியில் இருந்து அடுத்து வரும் போட்டிகள் வரை வெற்றி பெற வேண்டும். இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த சீசனில் முதன்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா இடம் பிடிக்க ஏழு பவுலிங் ஆப்ஷனுடன் களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார் தோனி.
இதுமட்டுமின்றி சாம் கரனை டூப்ளசிஸ்ஸூடன் தொடக்க வீரராகவும் இறக்கினார். ஆனால் காட்டினாலும் எதிர்பாராவிதமாக டூப்ளசிஸ் ரன் ஏதும் அடிக்காமல் முதல் பந்திலேயெ டக் அவுட் ஆனார். நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த வேகத்தில் சாம் கரன் பெவிலியன் திரும்பினார்.
பின் வாட்சன் – ராயுடு பார்ட்ன்ஷிப் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியாக இருந்தது. இருவரும் தேவையில்லாத பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர். இந்த ஜோடி 64 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த போது ராயுடு 41 ரன்களில் அவுட். அவரைத் தொடர்ந்து வாட்சனும் 42 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
பின் தோனி நடராஜன் வீசிய 19ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே 21 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் ஜடேஜா அடித்த ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உதவியால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன், கலீல் அஹமத், சந்தீப் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது . அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டே 4 ரன்களில் ரன் அவுட்டானார். பின் வில்லியம்சனுடன் ஓரளவிற்கு பார்ட்னர் ஷிப் பில்ட் செய்து ஆடிவந்த பேரஸ்டோ 23 ரன்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்டானார்.
இதையடுத்து ப்ரியம் கார்க் 18 ரன்களில் வெளியேற ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்ரேட் 13ஐ எட்டியது. இந்த சூழலிலும் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார் வில்லியம்சன். ஆனால் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 17 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வில்லியம்சன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் 18,19ஆவது ஓவரில் அதிரடி காட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிபி ஏற்றிய ரஷீத் கான் ஹிட் விக்கெட் ஆனார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணியில் கரன் ஷர்மா, பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், சாம் கரன், ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.