ஐபிஎல் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முன்னதாக லீக் போட்டிகளில் இரண்டு முறையும் டெல்லி ஹைதராபாத்திடம் வீழ்ந்துள்ளது. இதனால் இம்முறை அதற்கு பழிவாங்குமா என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்றதுய் பேட்டிங் செய்ய விரும்பினார் ஸ்ரேயாஸ் ஐயர். அணியில் இரண்டு மாற்றங்கள்.
பிரவின் துபே, ஹெட்மயர் மீண்டும் அணியில் திரும்பினர். ஹைதராபாத் அணியில் மாற்றம் இல்லை. வாழ்வா சாவா போட்டியில் டெல்லி அணி ஸ்டாய்னிஸை ஓப்பனராக இறக்கியது. தவான் – ஸ்டாய்னிஸ் பவர்பிளே ஓவர்களில் அதிரடி காட்டினர். இந்த இணையை ரஷீத் கான் எட்டாவது ஓவரில் பிரித்தார். அவரது அபராமான சுழற்பந்து வீச்சில் ஸ்டாய்னிஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய தவான் அரைசதம் அடித்து செட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
மறுமுனையில் அதிரடியாக ஆட முயற்சித்த ஐயர் 21 ரன்களில் வெளியேற ஹெட்மயர் பவுண்டரி சிக்சர் என விளாசி அதகளப்படுத்தினார். முதல் ஓவரில் இருந்து சிறப்பாக ஆடிய தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தபோது 19அவது ஓவரில் அவுட்டாகினார். அதில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். அதுவரை ஓவருக்கு ஒரு பவுண்டரி தந்த ஹைதராபாத் அணி கடைசி இரண்டு ஓவர்களில் ஒரு பவுண்டரியும் தரவில்லை. அந்த அளவுக்கு சந்தீப் ஷர்மா 19ஆவது ஓவரையும், நடராஜன் கடைசி ஓவரையும் வீசினர்.
அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் ஆறு பந்துகளிலும் யார்க்கர் வீசி மிரட்டினார் நடராஜன். இதனால் 200 ரன்கள் குவிக்க வேண்டிய டெல்லி. 189 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹெட்மயர் 22 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் ஹோல்டர், சந்தீப் ஷர்மா, ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
190 ரன்கள் இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான வார்னரை தனது வேகத்தால் இரண்டு ரன்களில் போல்ட்டாக்கினார் ரபாடா. பின் பவர்பிளேவில் அதிரடி காட்ட முயற்சித்த ப்ரியம் கார்க், மனீஷ் பாண்டே ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஜேசன் ஹோல்டரும் வில்லியம்சனுடன் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 11 ரன்களில் நடையைக் கட்ட ஹைதராபாத் அணி 11.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது
அணியின் வெற்றிக்கு தேவையான ரன்ரேட் 12ஐ எட்டிய நிலையிலும், கேப்களை பார்த்து சிறப்பாக ஆடிய வில்லியம்சன் பேக் டூ பேக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அபூல் சபாத் தற்பங்கிற்கு அதிரடி காட்டினார். 20 பந்துகளில் 43 ரன்கள்
தேவை என்ற நிலையில் வில்லியம்சன். 67 ரன்களில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அபூல் சமாத் ரபாடா பவுலிங்கில் சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 16 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்தார். சமாத்தை தொடர்ந்து ரஷீத் கான், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் ரபாடா பவுலிங்கில் வீழ்ந்தனர்.
இறுதியில் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஃபைனலில் நுழைந்துள்ளது. டெல்லி அணியில் ரபாடா நான்கு விக்கெட்டுகளும், ஸ்டாய்னிஸ் மூன்று விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி நாளை ( நவ.10) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்குமா அல்லது டெல்லி அணி முதன்முறையாக கோப்பை வென்று வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.