கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களுக்கு ப்ளூடூத் பேண்ட், பயோ பபுள் போன்ற பல கெடுபிடிகளை அதிகாரிகள் விதித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தளங்கள் மூடப்பட்டன. இதனால், மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. கொரோனாவுக்கு மத்தியில் போட்டி நடைபெறுவதால், வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலுக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், பயோ பபுள் எனும் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வளையத்தில் வெளி உலக நேரடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎல் வீரர்கள், உதவி ஊழியர்கள், ஐபிஎல் போட்டி அதிகாரிகள் போட்டி முடியும் வரை இதை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வீரர்கள் யாரும் சக வீரர்களின் அறைக்கு செல்லக் கூடாது, சக வீரர்களை ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சந்திக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
வீரர்கள் இரண்டு மீட்டர் தூர சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், அதிநவீன ப்ளூடூத் பேண்ட் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விதியை மீறினால், அலாரம் ஒலிக்கும் வகையில் இந்த ப்ளூடூத் பேண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தூங்க செல்லும்முன் மட்டுமே அதை கழற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.