துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் ஆடி ஏழு வெற்றி, இரண்டு தோல்வி என 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ஒன்பது போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில் டெல்லி அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம் பஞ்சாப் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் மட்டும் மிகச் சிறப்பாக ஆடி தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 61 பந்துகளில் 12 பவுண்டரி, மூன்று சிக்சர் என 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க டெல்லி அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி இரண்டு, மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின், ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் இன்ஃபார்ம் பிளேயரான கே.எல்.ராகுல் 15 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த கெயில் துஷார் தேஷ்பாண்டேவின் நான்காவது ஐந்தாவது ஓவரில் இரண்டு சிக்சர், மூன்று பவுண்டரி என 25 ரன்களை சேர்த்தார். பின் அஸ்வின் ஓவரில் அவர் 29 ரன்களில் கெளம்ப, நிக்கோலஸ் பூரன் – மயங்க் அகர்வால் இடையிலான குழப்பத்தால் மயங்க் அகர்வால் ஐந்து ரன்களில் ரன் அவுட் ஆக பஞ்சாப் 5.5 ஓவர்களில் 55 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலிலும் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்த பூரன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததால் அணிக்கு தேவையான ரன்ரேட்-ஐ ஆறுக்கு குறைவானது. இதையடுத்து அவரும் 28 பந்தில் 53 ரன்களிலில் பெவிலியன் திரும்பினார். இதில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும். பின் பொறுப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 32 ரன்களில் வெளியேற, ஜிம்மி நீஷம் 19ஆவது ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மேட்ச்சை ஃபினிஷ் செய்தார். இதனால் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 167 ரன்களை எட்டி பஞ்சாப் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் கடந்த முறை டெல்லியிடம் சூப்பர் ஓவரில் அடைந்த தோல்விக்கு பஞ்சாப் பழிவாங்கியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் பலனாக பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி தொடர்ந்து 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.