ஐபிஎல் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
பெங்களூருவுடன் சூப்பர் ஓவரில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் டி காக் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா மிக சிறப்பாக விளையாடினார். இஷன் கிஷன் – ரோகித் ஷர்மா ஜோடி 62 ரன்களை சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பொல்லார்ட் உடன் ஜோடி சேர்ந்து அரைசதம் விளாசிய ரோகித் ஷர்மா 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டெத் ஓவர்களில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வெளுத்துக் கட்டினார்.
அதிலும் குறிப்பாக கிருஷ்ணப்ப கவுதம் வீசிய கடைசி ஓவரில் பொல்லார்ட் நான்கு சிக்சர்கள் அடிக்க மும்பை ஸ்கோர் 20 ஓவர்களில் 191-4. பொல்லார்ட் 20 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரி என 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பின் 192 எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிக்கோலஸ் பூரனைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானகினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா, ஜேம்ஸ் பெட்டின்சன், ராகுல் சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் பஞ்சாப் அணி 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.