பிரண்ட்ஸ் படத்தில் வரும் 200 வருஷ கடிகாரத்தை இப்படி சல்லி சல்லியா நொருங்கிட்டிங்களே டா என்ற டயலாக் போல கொல்கத்தா அணி தனது 13 வருட ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைவான ஸ்கோரை எடுத்துள்ளது.
அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி ஒன்பது போட்டிகளில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்ததால் இப்போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட முன்னேறிவிடும்.
அதேசமயம் ஒன்பது ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவுக்கு மட்டுமின்றி பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும். ஏனெனில் இந்த போட்டியின் முடிவு பொறுத்துதான் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவரும். இந்த சூழலில் டாஸ் வென்று கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ரசலுக்கு பதிலாக டாம் பேன்டான் மீண்டும் அணிக்குள் திரும்பினார். அதேபோல் ஆர்சிபி அணியில் மீண்டும் முகமது சீராஜ் இடம்பிடித்தார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி (1), நிதீஷ் ரானா (0), டாம் பேண்டான் (13) ஆகியோரை முகமது சீராஜ் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் விளைவாக கேகேஆர் அணி பவர் பிளே முடிவில் 17 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை தடுமாறியது. அதன் பின் தினேஷ் கார்த்திக்கும் நான்கு ரன்களில் வெளியேற, மோர்கன் தனி ஒருவரால் அணியை காப்பாற்ற முடியவில்லை.
அவரும் 34 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களுக்கு திரும்பினார். இறுதியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது. 13வருட ஐபிஎல் வரலாற்றில் கேகேஆர் அணி அடித்த குறைந்த ஸ்கோர் இதுவாகும். ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் நான்கு ஓவர்களில் இரண்டு மெய்டன் ஓவர்கள் உட்பட எட்டு ரன்களை மட்டுமே வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு மெய்டன்களை வீசிய முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 13.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. படிக்கல் 25 ரன்களில் ரன் அவுட்டும், ஃபின்ச் 16 ரன்களில் ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் கொல்கத்தா அணியின் இந்த தோல்வியால் புள்ளிகள் பட்டியலில் ஐந்து ஆறு ஏழு இடங்களில் உள்ள பஞ்சாப்,ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகியோருக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கேட் ஓப்பன் ஆகியுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணி, ராஜஸ்தானுடன் மோதுகிறது. IPL 2020 Cricket News in Tamil