டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடர் பல எதிர்பாராத திருப்பங்களகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி,. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் இரு அணிகளிலும் ஆடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி என எட்டு புள்ளிகளை பெற்று முறையே நெட் ரன்ரேட் அடிப்படையில் கே.கே.ஆர் அணி மூன்றாவது இடத்திலும் ஆர்சிபி அணி நான்காவது இடத்திலும் இருந்தது.
இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் 32 ரன்களிலும், ஃபின்ச் 47 ரன்களிலும் அவுட்டாகினர். ஷார்ஜா ஆடுகளம் முந்தைய போட்டிகள் இல்லாமல் இம்முறை சற்று மந்தமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க தடுமாறினர்.
ஆனால் இதுபோன்ற அடுகளத்திலும் தன்னால் அதிரடி காட்ட முடியும் என்பதை மிஸ்டர் 360 டி வில்லியர்ஸ் நிரூபித்தார். அவரது வானவேடிக்கையால் 15 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்திருந்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 194 ரன்களை குவித்தது. டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஆறு சிக்சர் என 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரி என 33 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் பிரசீத் கிருஷ்ணா, ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 195 ரன்கள் எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 33 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, உதானா, முகமது சிராஜ், சாஹல் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு தோல்வி என 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது