அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் கடைசி இடத்தில் இருந்து கெயில் வருகையால் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் பஞ்சாப் அணி, 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி மட்டுமே முன்னேறிய நிலையில் இப்போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்தால் பிளே ஆஃப் கனவு கனவாக இருக்கும்.
இந்த சூழலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கிறிஸ் கெயில் அதிரடியில் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது.
63 பந்துகளில் ஆறு பவுண்டரி, எட்டு சிக்சர் என கெயில் தனது சதத்தை ஒரு ரன்னில் நழுவவிட்டார். 19ஆவது ஓவரில் தனது ஏழாவது சிக்சர் அடித்ததன் மூலம் டி20யில் 1000 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் கெயில். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்தது. 26 பந்துகளில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர் என 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்டாக்ஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் ஸ்டோக்ஸ் வழியில் அதிரடி காட்டினர். ஒருபக்கம் பொறுப்பாக ஆடிய உத்தப்பா 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய சாம்சன் 25 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 47 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு 34 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவை. அப்போது களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், பட்லர் இருவரும் அதிரடி காட்டி 17.3 ஓவர்களிலேயே 186 ரன்களை எட்டச் செய்தனர். ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்களுடனும், பட்லர் 11 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பஞ்சாப் அணியின் ஐந்து தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.