கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த ஆண்டு நடக்க விருந்த பாலன் டி ஆர் 2020 விருது நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பிரான்ஸ் கால்பந்து அமைப்பினர் அதிகாரப்பூர்வு அறிவிப்பை வெளியிட்டனர்.
உலகிலேயே தலைச்சிறந்த வீரருக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் விருது 1956 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த கால்பந்து வீரருக்கு தங்கப் பந்து விருதாக வழங்கப்படும். 180 நபர்களை கொண்ட நடுவர் மன்றம் தீர்மானத்தின் படி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து எந்த ஒரு கால்பந்து போட்டியும் நடைபெறவில்லை. மே மாத தொடக்கத்தில் இருந்து ஐரோபாவின் பல்வேறு நாடுகளில் ரசிகர்களின்றி கால்பந்து போட்டிகள் பாதுகாப்பு முன்னேச்சரிக்கைகளுடன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பதற்கு ரசிகர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் இல்லாமல் போட்டி நடந்திருப்பதால் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பது இயலாது காரியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிறந்த கால்பந்து வீரர் விருது ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது.
கடந்து ஆண்டு பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி விருதை பெற்றுச் சென்றார். தற்போது வரை 6 முறை இந்த விருதை பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை பார்சிலோனாவின் மெஸ்ஸிக்கே சேரும். இவருக்கு அடுத்தப்படியாக யுவன்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 5 முறை பாலன் டி ஆர் விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.