சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் பேயர்ன் முனிச் அணி 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது.
2019-20 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மூன்றாவது காலிறுதி போட்டி நேற்று (ஆகஸ்ட் 14) லிஸ்பானில் நடைபெற்றது. இதில் கால்பந்து ஜாம்பவான்களான பேயர்ன் முனிச், பார்சிலோனா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து முழு வீச்சில் பேயர்ன் முனிச் அணி அட்டாக் செய்து ஆடத் தொடங்கியது. அதன் பலனாக மூன்றாவது நிமிடத்திலேயே பேயர்ன் முனிச் அணியின் முன்கள வீரர் தாமஸ் முல்லர் கோல் அடித்தார். பின்னர் இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ஜோர்டி ஆல்பாவின் கிராஸை பேயர்ன் முனிச் டிஃபெண்டர் ஒன் கோல் அடிக்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
ஆனால் அதன்பிறகும் பேயர்ன் முனிச் அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு பார்சிலோனாவால் சுத்தமாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. பார்சிலோனா வீரர்கள் டிஃபெண்டிங்கில் ஏராளாமான தவறுகளை மேற்கொண்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பேயர்ன் முனிச் அணி 21,27,31 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியது. பேயர்ன் முனிச் வீரர்களான இவான் பெரிசிச், காப்ரி, தாமஸ் முல்லர் ஆகியோர் முறையே கோல் அடித்தனர்.
பின்னர் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஸ்டிரைக்கர் சுவாரஸ் கோல் அடித்து அணிக்கு புத்துயிர் பெற்று தந்தார். ஆனால் பார்சிலோனா அணியோ முதல் பாதியில் செய்த தவறை மீண்டும் இரண்டாம் பாதியில் செய்தது.
இதன் விளைவு, பேயர்ன் முனிச் ஆட்டத்தின் 62, 82,85,89 ஆகிய நிமிடங்களில் சீராக கோல் அடித்தது. அதிலும் குறிப்பாக ஏழு நிமிடங்களில் (82-89) மூன்று கோல்கள்! ஜோஷ்வா கிளம்பிச், லெவண்டோஸ்கி ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க கொடின்ஹோ இரண்டு கோல்களை அடித்து பார்சிலோனாவை பந்தாடினார்.
இறுதியில் பேயர்ன் முனிச் அணி 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் எட்டு கோல்களை விட்டு தந்ததன் மூலம், பார்சிலோனா அணி 70 வருட சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.