இந்த ஆண்டுக்கான விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஐந்து வீரர்களுக்கு கிடைத்துள்ளது. அதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலும் ஒருவராவார்.
இதன் மூலம் இவ்விருதை வென்ற மூன்றாவது பாரா தடகள வீரர் (மாற்றுத்திறனாளி தடகள வீரர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
25 வயதிலேயே இந்த உயரிய விருதை வென்று தமிழ் நாட்டிற்கு பெருமைத் தேடிதந்த மாரியப்பன் தங்கவேலு குறித்து பார்ப்போம்.
அதுவரை பாராலிம்பிக் ஒன்று இருக்கிறது என்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. அப்போது தான் உலகளவில் நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஒரு செய்தி அனைத்து விதமான ஊடகங்களில் வெளியாகின.
பாராலிம்பிக்கில் அதிலும் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் மாரியப்பன் தங்கவேலு. 2016 ரியோ பாராலிம்பிக் மூலம் இவருக்கு இந்தியாவில் மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
சேலம் மாவட்டம் பெரியவேடம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது பெற்றோர்களான தங்கவேல் – சரோஜா ஆகியோர். செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
மற்ற குழந்தைகள் போலவே இவரும் 5 வயதில் பல கனவுகளுடன் ஒரேநாள் பள்ளிக்கு சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது.
சாதனையாளர்களுக்கு பலவழிகளில் தடை வந்தாலும் அவை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. அந்த தடையையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாகவே அவர்கள் மாற்றுவர்.
அதுபோல தான் மாரியப்பனும். கால் இல்லை என்பதால் துவண்டு போகாமல் அதே காலை வைத்து பள்ளி பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தினார். இவரது திறமையை அறிந்த அவரது உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரனின் ஊக்கத்தாலும் அவர் வழங்கிய பயிற்சியாலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார்.
இதையடுத்து 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் தங்கம் வென்று தனது கால் தடத்தை பதித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கம் வென்ற இவருக்கு விளையாட்டின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2018இல் நடைபெற்ற உலக பாராதடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிக்காக மும்முரம் காட்டி வருகிறார்.