பங்கி ஜம்பிங்’ (Bungy Jumping) என்பது, உயரமான இடத்திலிருந்து கயிறுகட்டிக் குதிக்கும் விளையாட்டு. ‘பங்கி’ என்பது, மேற்கு ஜெர்மனியின் கிளை மொழிச் சொல். இதற்கு, ‘நீளும் தன்மையுள்ள வார்’ என்று பொருள்.
பங்கீ ஜம்பிங் என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டு ஒரு உயர்ந்த நிலை இருப்பிடத்தில் இருந்து இழுபடக்கூடிய ரப்பர் கயிற்றால் பிணைத்தபடி அந்தரத்தில் குதித்து மேலும் கீழும் ஊசலாடும் வகையான விளையாட்டை குறிப்பதாகும். இந்த உயர்ந்த நிலை இருப்பிடம் பொதுவாக ஒரு நிலையான அடித்தளம் கொண்ட பொருளாகும், அவை ஒரு கட்டிடம், பாலம் அல்லது தூக்கியாக இருக்கலாம்; ஒரு நகர்ந்து கொண்டிருக்கும் உச்ச நிலையில் இருக்குமொரு பொருளில் இருந்தும் குதிக்கலாம், அவற்றில் சில சூடான காற்றடைத்த ஊதுபை (பலூன்) வகைகள், உலங்கு வானூர்தி, மற்றும் அது போன்ற நிலத்திற்கு மேற்பரப்பில் வட்டமிடும் தன்மை கொண்ட பொருட்களாகலாம். குதிக்கும் பொழுது உயரத்தில் இருந்து விழும் திகிலான உணற்சி, மற்றும் திரும்பத்திரும்ப எதிர்வீச்சடைந்து மீள்தல் போன்ற செயல்பாடுகள் மற்றும் அதிர்வுகளால் மனதில் விம்மி நிறையும் குதூகுலம் போன்ற இணையற்ற அனுபவங்கள் ஒருவனை இந்த வித்தியாசமான வீர விளையாட்டில் பங்குற தூண்டுகின்றன.
ஒரு விளையாட்டு வீரன் குதிக்கும் பொழுது, கட்டியிருக்கும் இழுபடக்கூடிய வடம் அல்லது இரப்பர் போன்ற கயிறு நீண்டு கொடுக்கும் மேலும் அவன் மீண்டும் மேல்நோக்கி வீசப்படுவான், இப்படி அவன் மேலும் கீழும் ஊசலாடுவது தொடரும், ஒரு சுருள்வில் போல கயிற்றின் ஆற்றல் இழக்கும் வரை ஊசலாடிக்கொண்டே இருக்கும் ஒரு அனுபவம் அவனை மேலும் பங்கு கொள்ள செய்யும்.
எப்போது தொடங்கப்பட்டது?
இந்த விளையாட்டில் பயன்படுத்தும் கயிறு, இழுபடும் தன்மையுள்ள ரப்பரை உள்ளடக்கித் தயாரிக்கப்படுகிறது. 1950ஆம் ஆண்டுகளிலேயே பங்கி ஜம்ப்பிங் சாகசங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தடைசெய்யப்பட்ட விளையாட்டாக இருந்தது.
1979, ஏப்ரல் 1ஆம் தேதி, முதன்முதலாக நவீன பங்கி ஜம்ப்பிங் விளையாட்டு, இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள 250 அடி உயரமான கிளிஃப்டன் தொங்கு பாலத்தில் நடந்தது. நிகழ்ச்சி நடந்து முடிந்ததுமே அதில் ஈடுபட்ட டேவிட் கிர்கே மற்றும் சைமன் கீலிங் (David Kirke and Simon Keeling) ஆகியோரை கைதுசெய்துவிட்டார்கள். பிறகு, முறைப்படுத்தப்பட்ட பங்கி ஜம்ப்பிங் விளையாட்டு நடத்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு
குதிக்கும் பொழுது பல விதங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. பாதுகாப்பிற்கான கம்பிதைத்தல் விட்டுப் போனாலோ, கயிற்றின் மீள் திறன் குறைபட்டாலோ, அல்லது கயிற்றை மேடையுடன் சரியாக இணைக்கத் தவறினாலோ, விளையாடுபவன் காயமடையலாம். இவை அனைத்தும் மனிதனின் அஜாக்கிரதையினால் தவறான கம்பித்தைத்தல் காரணமாக ஏற்படக்கூடியவை. அதனால் சரியான பாதுகாப்பு உபகரணங்களுடன், உறுதியான மன திடத்திடன் இதை மேற்கொள்ளலாம்.