இந்தியாவில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வரும் நிலையில், பிரைம் வாடிக்கையாளர்களுக்கான 48 மணிநேர அமேசான் பிரைம் டே சலுகையில் பெரும்பாலான சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள், மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கவே பயனாளர்கள் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அமேசான் 150 மில்லியன் பிரைம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியன் பிரைம் வாடிக்கையாளர்கள் அடங்குவர். இப்படி இருக்கையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கான
அமேசான் பிரைம் டே விற்பனை இந்தியாவில் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்களில் அறிவிக்கப்பட்ட சலுகை விற்பனையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளது.
குறிப்பாக இந்தியா – சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து நாட்டில் சீன தயாரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், அமேசான் பிரைம் டே சலுகையில் சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள், மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கவே பயனாளர்கள் முன்னுரிமை காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்மார்ட் போன்களில், ஒன் பிளஸ் நோர்ட் 5ஜி, ஒன் பிளஸ் 7டி, ஒப்போ ஏ5 2020, ஹானர் 9ஏ, ஜியோமி உள்ளிட்ட சீனத் தயாரிப்புகள் அதிகம் விற்கப்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.
இது தவிர எலக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள் உள்ளிட்ட
பொருட்கள் மூலம் மொத்தம் இந்த பிரைம் டே விற்பனையில் ரூ. 4492 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை காட்டிலும் அதிகமாகும்.
அதேசமயம் இந்த பிரைம் டே விற்பனையில் சிறு,குறு தொழிலாளர்களும் அதிகளவில் பயனடைந்துள்ளனர். சுமார் 91 ஆயிரத்து சிறு, குறு தொழிலாளர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், அதிலும் 70 சதவீத ஆர்டர்கள் சிறிய பகுதிகளில் இருந்து கிடைத்ததாகவும் அமேசான் இந்தியாவின் விற்பனை பிரிவு மேலாளர் அமித் அகர்வால் கூறியுள்ளார்.
91 ஆயிரத்து சிறு குறு தொழிலாளர்களில் நான்காயிரம் தொழிலாளர்கள் தலா 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த பிரைம் டே விற்பனையின் மூலம் 266 தொழிலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர் எனக் கூறினார்.
இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டப் பிறகு, அமேசானில் விற்பனையாளர்களின் பதிவு விகிதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது என அகர்வால் கூறினார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை பிரைம் டே விற்பனையில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகும்.
உள்ளூர் வணிகங்களின் வருவாய் உயர்த்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நேரத்தில், இது வரவேற்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.
கேஷ்பேக் கூப்பன்களை வழங்குவதன் மூலம் சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் விற்பனைகளை அதிகரிக்க நிறுவனம் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டதாக அகர்வால் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ வசதி, கூப்பன்கள், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குவதன் மூலம் விற்பனைகள் அதிகரிக்கும் அதேசமயம் அவர்களது செலவுகளும் குறைக்க உதவும் என தெரிவித்தார்.