கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு இந்திய ராணுவம், தங்களது அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது. அதோடு ராணுவ வீரர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை செயலிழக்கச் செய்யும்படியும் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்தொடர்புக்கும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ராணுவ சைபர் பிரிவு சமூகவலைதள போக்குகளை ஆராய்ந்து, வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கண்டறிந்தது. அந்த ஆண்டில் இருந்தே சமூகவலைதளம் குறித்து பல்வேறு கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பின்பற்றப்படுகிறது.
பேஸ்புக் மூலம் உளவு பார்ப்பதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அனைத்து அதிகாரிகளும் பேஸ்புக் கணக்குகளை செயலிழக்க செய்ய வேண்டும் எனவும் தங்கள் புகைப்படத்தை சீருடையுடன் இருக்கும்படி இருந்தால் அதை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டது.
சமூகவலைதளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது, ராணுவ வீரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை குறித்த சுயவிவரங்களை வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதேபோல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா விமான ஓட்டிகளுக்கு சமூகவலைதளங்களால் ஏற்படும் விளைவு குறித்து தெரிவித்திருந்தார். அதில் இந்த காலக்கட்டத்தில் இளம் விமான ஓட்டிகள் சமூகவலைதளங்களால் கவரப்பட்டு, அதற்கு அடிமையைப்போல் இருக்கிறார்கள் எனவும் அதிகப்படியான நேரங்களை சமூகவலைதளங்களில் செலவிடுவதால் அவர்களுக்கு தூக்கம் கெட்டப்போகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதல் விளைவாக இந்திய தொழில்நுட்பங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக செயலிகள், இந்தியாவில் பிரதான செயலிகள் பெரும்பாலானவை சீன செயலிகளே என கண்டறியப்பட்டதோடு அதில் 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அறிவித்தது.
அதேபோல் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்க வேண்டும் என வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சில செயலிகளும் உள்ளடக்கம்.
தகவல் கசிவை தடுக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த செயலிகளின் பட்டியலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் பேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், வைபர், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், சமோசா, கவாலி, சாப்யா, யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, அலி எக்ஸ்பிரஸ், டிண்டெர், ஒகே கப்பிட், பாடோ, பம்பிள், டெய்லி ஹண்ட், நியூஸ் டாக், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட், ஹங்காமா உள்ளிட்ட 89 செயலிகள் இடம்பெற்றிருக்கிறது.