இந்தியா சீனா எல்லையில் இரு ராணுவத்திற்கும் இடையே கடந்த மாதம் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து இரு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தற்போது சீனா தனது படைகளை பின்வாங்கியுள்ளது.
இருப்பினும் இந்தியா ராணுவத்தினர் எந்நேரமும் எல்லையில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு விருகின்றனர். ஏனெனில் முன்னதாக பின் வாங்குவதாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதுதான் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இந்தியாவில் சீனாவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. இதற்கிடையே இந்திய அரசு தனியுரிமைப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன செயலிகளான டிக் டாக், ஷேர் இட், யு.சி.பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இதனால் ஒரு சில பயனாளர்கள் கவலை அடைந்தாலும், இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிட்டியது.
இந்நிலையில் தற்போது இந்த செயல்களின் நகல்களாக கருதப்படும் டிக் டாக் லைட், ஷேர் இட் லைட் உள்ளிட்ட 47 சீன செயலிகளுக்கும் இந்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது போன்ற இன்னும் உள்ள செயலிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அதிலும் ஏதேனும் இந்திய இறையாண்மைக்கும், தனியுரிமை பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிந்தால் விரைவில் அந்த செயலிகளும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.