வாட்ஸ் அப்பில் அனுப்பும் மெசேஜ்க்கள் குறிப்பிட்ட நாளில் மறைந்து போகும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் செய்துள்ளது.
அதன்படி பயனாளர்கள் அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு அவர்களிம் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் அனுப்பும் செய்திகள் மறைவது அந்தந்தக் குழுக்களின் அட்மின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
1.அனுப்பிய செய்திகள் மறைய 7 நாட்கள் என்கிற கால அளவை வாட்ஸ் அப் நிர்ணயித்துள்ளது.
2. ஒரு வாரம் வரை வாட்ஸ் அப் செயலியை இயக்காமல் இருந்தால் அந்தச் செய்தி மறைந்துவிடும்.
3. வாட்ஸ் அப் செயலி பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் போது, செய்திகளின் முன்னோட்டம் நோட்டிஃபிகேஷனில் வரும். அப்படி வரும்போது மறைந்து போன செய்தியின் முதல் சில வார்த்தைகளைப் பார்க்க முடியும்.
4.ஒரு வேளை மறைய வேண்டிய ஒரு செய்தியை இன்னொருவருக்கு அனுப்பி, அங்கு மறையும் வசதி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் அந்த உரையாடலில் ஃபார்வர்ட் செய்யப்பட அந்தச் செய்தி மறையாது.
இதே வசதி பயனர்கள் அனுப்பும் புகைப்படங்கள், காணொலிகள், ஒலிச் செய்திகள் என அனைத்துக்கும் இருக்கும். ஆனால், தானாகப் பதிவிறக்கம் செய்யும் வசதி தேர்வு செய்யப்பட்டிருந்தால் அது மறைந்தாலும் உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
தற்போது இந்த வசதி பீட்டா செயல்ப்பாட்டில் உள்ளதால், சோதனை முடிந்து உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.