நாடு முழுவதும் ஜியோ வருகைகக்கு பின்னர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. சில நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சிகரமான பல திட்டங்கள், டேட்டா வாய்ஸ்கால் ஆஃபர்களை அறிவித்தன.
அந்த வகையில், ஜியோவை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வோடஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் ஒன்றாக கை கோர்த்தன. அதன்பிறகு, வோடஃபோன் ஐடியா என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வோடஃபோன்-ஐடியா இரு நிறுவனங்களும் முழுமையாக இணைந்துள்ளது. அதற்கு அடையாளமாய் ஒரு புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது.
‘Vi’ என்பது தான் வோடஃபோன் ஐடியாவின் புதிய லோகோவாகும். இதில் V என்பது வோடஃபோனையும், i என்பது ஐடியாவையும் குறிக்கும். இனி சிம்கார்டுகள், வெப்சைட், பில் பேப்பர் உள்ளிட்ட அனைத்திலும் ‘Vi’ லோகோ இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சிஇஓவும் நிர்வாக இயக்குநருமான ரவிந்தர் தக்கர் கூறுகையில், ‘வோடஃபோன் ஐடியா இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளன. அன்று முதல் இரு பெரும் நெட்வொர்க்குகளையும், வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைத்து சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தோம்.
அது தற்போது முழுமையாகியுள்ளது. Vi ஐ அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். 4ஜி நெட்வொர்க்கில் உலக தரத்திலான டிஜிட்டல் அனுபவங்களை 1 பில்லியன் இந்தியர்களுக்கு வழங்கி வருகிறோம். 5ஜி நெட்வொர்க் கட்டுமானத்திற்கும் டிஜிட்டல் நெட்வொர்க்குகளுக்கும் இந்த பிராண்ட் உறுதுணையாக இருக்கும்.’இவ்வாறு தெரிவித்தார்.