கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் பிரதான ஒன்று ஊரடங்கு.
ஊரடங்கு ஆரம்பத்தில் கடினமாக அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் பல்வேறு வகை தொழில்களும் விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைன் டெலிவரிகளை பாதுகாப்போடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அதோடு ஸ்விகி டெலிவரி பெறும் ஹோட்டல்களில் உள்ள உணவு தயாரிப்பாளர்கள், பார்செல் செய்பவர்கள், டெலிவரி பாய்ஸ் என அனைவருக்கும் தினசரி காலை காய்ச்சல் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 5.5 லட்சம் பிரியாணிகளை பயனர்கள் ஆர்டெர் செய்து பெற்றுக் கொண்டதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு சுமார் 32 கிலோ வெங்காயமும், 5.6 கோடி கிலோ வாழைப்பழங்களையும் ஸ்விகி மூலம் பயனர்கள் ஆர்டர் செய்து பெற்றுள்ளனர்.
குறிப்பாக தினசரி சரியாக இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் இரவு உணவுகளுக்கு ஆன்லைன் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 75 ஆயிரம் கிருமி நாசினிகள், 47 ஆயிரம் முகக் கவசங்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதோடு 1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகள், 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்த நாள் கேக்குகளை ஸ்விகி ஆர்டர் மூலம் பயனர்கள் வாங்கியுள்ளனர் எனவும் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.