பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு, இட்லி. நம்மில் பலருக்கு அத்தியவாசிய காலை உணவாக இருப்பது இட்லி என்று சொன்னால் அது மிகையாகாது. நோயாளிகளும், உணவுக் கட்டுபாட்டில் இருப்பவர்களுக்கும் மென்மையான இட்லி மீது எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு.
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் பலர் இட்லியையே விரும்பி உண்கின்றனர். இந்த இட்லியைப் பல்லாண்டுகளாக தென்னிந்தியர்கள் சாப்பிட்டு வந்தாலும், அதன் பூர்விகம் இந்தியா இல்லை என்றால் நம்பமுடிகிறதா…? ஆனால் அதுதான் உண்மை, அதை நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும். இந்தோனேசியாவில் இதை `கெட்லி” (Kedli) என்பார்கள். அதுதான், பிற்காலத்தில் `இட்லி’ என மருவியது என்றும், கன்னட மக்கள் பயன்படுத்திய இல்லாலிகே உணவுதான் ‘இட்லி’ என்றும் பல வரலாறு சான்றுகள் சொல்லப்படுவதுண்டு.
புளிக்க வைக்கப்படாத மாவினால் ‘டோக்ளா’ என்ற பெயரில் குஜராத்திலும், புளிக்கச் செய்து அத்துடன் கள் சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ என்ற பெயரில் கேரளாவிலும், ‘சன்னாஸ்’ என்று மங்களூளூரிலும், இந்த இட்லி பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. சாக்லெட் இட்லி, காய்கறி இட்லி, சில்லி இட்லி, சிறுதானிய இட்லி என விதவிதமான ஃபிரஷ் இட்லி முதல் மிச்சமாகி இட்லி உப்புமா ஆவது வரை, பல வீடுகளில் வலம்வருகிறது. எனினும், ஆவியில் வேகவைத்த இட்லியே உடலுக்கு நல்லது.
இட்லி நல்லதா?
மருத்துவர் முதல் டயட்டீஷியன் வரை பரிந்துரை செய்யும் உணவு, இட்லி. இது, எளிதில் செரிமானம் ஆகும் உணவு மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவும். ஒரு இட்டிலியில் 85 கலோரிகள் உள்ளது. 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. சராசரியான எடை, உயரம் உடையவர்கள் ஒருவேளைக்கு 4 அல்லது 5 இட்லி சாப்பிடலாம். இட்லியுடன் சாம்பார் சேர்த்துச் சாப்பிடும்போது, புரதச்சத்து அதிகம் கிடைக்கும் என்பதால், இட்லிக்குச் சாம்பார்தான் பெஸ்ட் சாய்ஸ். சட்னி வகைகளைக் குறைத்துக்கொள்ளலாம். இட்லி மாவுடன் காய்கறிகளைச் சேர்த்து தயாரிப்பதன் மூலம், இன்னும் கூடுதல் எனர்ஜி பெறலாம். காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் இட்லி சாப்பிடுபவர்கள், அதில் ஒருவேளைக்கு அரிசிக்குப் பதில், சிறுதானியங்களை உளுந்துடன் சேர்த்து அரைத்து இட்லி வார்க்கலாம்.
சரி இட்லி நம்மளோடது இல்லைனா? என்ன நமக்கு சாப்பாடுதான் முக்கியம். இட்லி மாதிரியான ஹெல்தி சாப்பாடுனா, சொல்லவா வேணும் சாப்பிடுவோம்.