எரிசக்தி முதல் தொலைத்தொடர்பு வரை இந்திய அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தம் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ஆனால், இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்தால் மட்டும் போதாது என்பதால், முகேஷ் அம்பானி அடுத்த கட்டத்தை எட்ட திட்டமிட்டார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அதிக கடன் சுமை இருந்ததால் அதை முழுவதுமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2021 மார்ச் மாதத்திற்குள் ரிலையன்ஸ் குழுமத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற இலக்கு நிர்ணயித்தார்.
இதனால், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே முகேஷ் அம்பானி அதிக முதலீடுகளைத் திரட்டுவதில் மும்முரமாக இருந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சூழலில் அம்பானி மட்டும் முதலீடுகளைத் திரட்டி பண மழையில் குளித்தார்.
குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே ரிலையன்ஸ் குழுமம் ₹1.68 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. சவுதி அரேபியா, அபுதாபியின் அரசு முதலீட்டு ஆணையங்கள், பேஸ்புக், கூகுள், இன்டெல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடு செய்துள்ளன.
நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் 13% உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஜூன் மாதத்திலேயே ரிலையன்ஸ் குழுமம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியது.
தொடர்ந்து தனது சொத்து மதிப்பை உயர்த்தி வரும் அம்பானி, உலகின் தலைசிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கை உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 75.9 பில்லியன் டாலராக இருக்கிறது. அதேநேரம், வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 72.6 பில்லியன் டாலராகவும், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராகவும் உள்ளது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 5வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.