கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்க அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொது போக்குவரத்து என்பது பல்வேறு இடங்களில் இன்னும் இயங்கத் தொடங்கவில்லை. பொது மக்களும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சொந்த வாகனங்கள் இல்லாமல் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்றால் மறு பக்கம் கொரோனா பாதிப்பும் குறைந்தபாடில்லை. எனவே சொந்த வாகனங்கள் வாங்க இயலாத மக்கள் சைக்கிள் வாங்க முற்பட்டுள்ளனர். சைக்கிள் ஓட்டுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு வகையில் நன்மையை தான் உண்டாக்கும்.
இந்த சூழலில் கொல்கத்தாவில் தான் சைக்கிள் விற்பனை அதிகரித்து வருகிறது. சிறு வயது முதல் நடுத்தர வயதினர் வரை சைக்கிளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். கொல்கத்தாவில் உள்ள பிரபல சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டதிலிருந்து அதிகம் விற்பனையாகி வருவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 15 ஆயிரம் வரை உள்ள அதிநவீன சைக்கிள்களை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக அங்குள்ள பல்வேறு கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன் பயன்பாட்டால் காற்றில் மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த இயலும் . அனைவரும் குரல் எழுப்பி வரும் பருவ நிலை மாற்றத்திற்கு இதுவும் ஒரு தீர்வாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.