தொழில்நுட்பம் பொறுத்தவரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனா பொருட்கள் இல்லாத நாடே இல்லை என்ற அளவிற்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சீனா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனையடுத்து சீனாவின் ஹூஹான் நகரில் உருவான கொரோனா நோய் தொற்றால் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவை சந்திக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி சீனா தனது எல்லைகளை ஆக்கிரமிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக சீன ராணுவத்தினர் இந்தியா எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுப்பட்டதால் இந்திய ராணவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தை குறித்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகளின் பங்கு 72% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 81% சந்தை மதிப்பீடு உயர்வாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நோய் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்ததால் ஸ்மார்ட் ஃபோன்களின் இறக்குமதி 51 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதற்கு சீனா மீது அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள வெறுப்பு உணர்வு கூட காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.