பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுலின் அதிரடியான சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
நடக்க சீசனுக்கான ஐபிஎல் தொடரில் ( IPL 2020 ) , தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சூப்பர் ஓவர் வரை போய் தோல்வியுற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக ஜிம்மி நீஷமும், கிருஷ்ணப்ப கவுதமிற்கு பதிலாக தமிழக வீரர் முருகன் அஸ்வினும் அணியில் இடம் பிடித்தனர். மறுமுனையில் பெங்களூரு அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடைசி போட்டியில் அதே 11 வீரர்களுடன் களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான கே.எல்.ராகுலின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆட்டமிழந்தாலும் தனிஒருவனாக கே.எல.ராகுல் பெங்களூரு பந்துவீச்சை பவுண்டரிகளும், சிக்சர் களவுமாக விளாசினார். 69; பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 132 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த சதத்தின் மூலம் அவர் ஐபிஎல்லில் வேகமாக 2000 ரன்களை எடுத்த இந்திய வீரர் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். பெங்களூரு அணி தரப்பில் ஷிபம் துபே இரண்டு விக்கெட்டுகளும், சஹால் ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் களத்தில் நிலைக்காமல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி , தேவ்தத் படிக்கல் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 28 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி இமாலய வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவி பிஷ்னாய், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணிக்கு எதிரான தோல்வியால் அடைந்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ளார் கே.எல்.ராகுல்.