ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடைபெற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். அணியில் ராயுடுவுக்கு பதிலாக ருதுராஜ் கெயிக்வாட் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 2.2 ஓவர்களில் 11 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இந்த சூழலில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாவ்லா, ஜடேஜா, இங்கிடி ஆகியோரது பந்துவீச்சை சிக்சர்களாக மைதானத்தின் வெளியே பறக்கவிட்ட சாம்சன், தனது 19ஆவது பந்தில் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய இவர் 32 பந்துகளில் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி, ஒன்பது சிக்சர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லர், உத்தப்பா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானாகினர். மறுமுனையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். 19 ஓவர்களில் ஏழு விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்த ராஜஸ்தான் அணி, கடைசி ஓவரில் லூங்கி இங்கிடியின் இரண்டு நோபால் பந்துகளால் 30 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதில் ஆர்ச்சர் நான்கு சிக்சர் அடித்து துவம்சம் செய்தார். இதனால் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்களை இழந்து 217 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஒரு பக்கம் முரளிவிஜய் நிதானமாகவும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த வாட்சன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முரளி விஜயும் 21 ரன்களில் வெளியேற சிஎஸ்கே 58 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து. பின்னர் சாம் கரன், ருத்துராஜ் கெயிக்வாட், கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக சிஎஸ்கே அணி 14 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை பறிகொடுத்து. அணியின் வெற்றிக்கு கடைசி ஆறு ஓவர்களில் 102 ரன்கள் தேவை என்பதால் அதீத அழுத்ததிற்கு சிஎஸ்கே அணி தள்ளப்பட்டது. களத்தில் டூப்ளஸிஸ், தோனி இருந்தும் சிஎஸ்கே அணியால் எதுவும் செய்யமுடியாமல் போனது.
இதுபோன்ற இமாலிய இலக்கில் தனி ஒருவனாக போராடிய டூப்ளஸிஸ் 37 பந்துகளில் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி, ஆறு சிக்சர்கள் அடங்கும். பின் கடைசி ஓவரில் 38 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி தொடர்ந்து மூன்று பந்துகளில் சிக்சர் அடித்து ஆறுதல் வழங்கினார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளது.