மக்களை ஆர்வமாக தொலைக்காட்சி பார்க்க வைக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நிறுவனங்கள் ஏணைய செலவுகள் செய்கிறது. இது அனைத்தும் இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களை மையமாக வைத்தே.
வாடிக்கையாளர்கள் தங்களது பிராண்டுகளை வாங்க வேண்டும் என்ற முயற்சியில் அதிக தொகையை செலவிட்டு விளம்பரங்களை தயாரிக்கின்றனர். விளம்பரங்கள் செய்தால் போதும் நம் மக்கள் எதையும் வாங்கிக் கொள்வார்கள் என இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதற்கேற்ப போட்டிப்போட்டுக் கொண்டு விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
விளம்பரங்களானது தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், பத்திரிக்கைகள் என தொடங்கி தற்போதுள்ள வலைதளங்கள் வரை ஆட்கொண்டுள்ளது. சில பொருட்களை விற்கவும் தங்களது அறிமுகத்தை காண்பிப்பதற்கும் விளம்பரங்கள் அத்தியாவசியம்தான்.
அந்த விளம்பர காட்சிகளின் முறை என்பது அவசியம். ஆண், பெண்களின் உள்ளாடை, காண்டம் விளம்பரங்கள் என பல்வேறு வகை விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காண்டம் பயன்பாடு போன்ற விழிப்புணர்வு விளம்பரங்கள் அவசியம் என்றாலும் அதை ஒளிபரப்பும் முறை என்பதும் கவனிக்கத் தக்க ஒன்று.
நல்ல விஷயங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. இன்றுள்ள தொலைக்காட்சிகளின் முக்கிய நிதி ஆதாரமே இந்த விளம்பரங்கள்தான்.
இதில் குறிப்பிட்டு சொல்ல சில விளம்பரங்கள் உண்டு. அது பெண்கள், ஆண்களின் உள்ளாடை தொடர்பான விளம்பரங்கள். அதிலும் பெண்களின் உள்ளாடை தொடர்பாக இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விளம்பரங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பார்ப்பவர்கள் கண்களில்தான் ஆபாசம் என்ற ஒன்று உள்ளது, அது சரிதான். அதை அறிந்துக் கொள்வதற்கும் ஒரு வயது வேண்டுமே. அதன்படியே 18 ப்ளஸ் அடல்ட் வயது என குறிப்பிடப்படுகிறது.
வீட்டில் பெரியவர்கள் சொல்லுவார்கள் எது நல்லது எது கெட்டது என அறிந்துக் கொள்ள வயது வேண்டும். அந்த வயது வந்தால் குழந்தைகள் பக்குவப்பட்டு விடுவார்கள் என்று. வீட்டில் உள்ள தொலைக்காட்சியை 18 ப்ளஸ் மட்டுமே பார்க்கிறார்களா. சரி இளைஞர்கள் 18 ப்ளஸ் படம் பார்க்கும் போது அதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிறார்களா.
வீட்டில் உள்ள அப்பா, அம்மா என மொத்த குடும்பமும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, உடலில் உள்ளாடை மட்டும் அணிந்தப்படி சில பெண்கள் கவர்ச்சிகரமாக போஸ் கொடுக்கிறார்கள். இதை காட்சிப்படுத்தப்பட்டு விளம்பரமாக ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. பொருட்களை விற்க வேண்டும் விளம்பரங்கள் செய்ய வேண்டும் ஆனால் அதை முறையோடு கையாள வேண்டும் என்பது அவசியம்.
நாம் வாழ்வது 2020 ஆம் நூற்றாண்டு என்றாலும் மெட்ரோ நகரத்தில் வாழும் இளைஞர்கள், பெற்றோர்களின் தன்மையிலும்., கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் தன்மையிலும் வேறுபாடு உள்ளது. இன்றும் விமானத்தை ஆச்சரியத்தோடு பார்க்கும் மக்களும், ஷாப்பிங் மால் அதில் நகரும் படிக்கட்டுகள் என அனைத்தையும் வியப்போடு பார்க்கும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆடை எடுக்க டவுனுக்கு போகிறேன் என்று முகத்தில் பாண்ட்ஸ் பவுடரை கொஞ்சம் அதிமாக பூசிக் கொண்டு புறப்படும் இளைஞர்கள் நமது நாட்டில் இப்போதுதான் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ந்து நிற்கும் மெட்ரோ நகரங்களை மட்டுமே பொருட்படுத்தி இதுபோன்ற விளம்பரங்கள் இயல்பானது குடும்பத்தோடு பார்க்கும் யாரையும் புன்படுத்தாது என புரிந்துக் கொள்வது தவறு.