கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப இசை கலைஞர்களில் பலரின் மனங்களை கவர்ந்தவர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்.
இந்த பாடலில் சந்தோஷ் நாராயணன் தனது மகளின் வாயிலாக ஒரு படைப்பை பிறப்பித்திருக்கிறார். தீயின் தீக்குரலும், தோழர் அறிவின் வரிகளும் இந்த பாடலை தோல் தாங்கி தூக்கியிருக்கிறது. மக்களின் குரலாக இருக்கும் இந்த பாடலும் இதன் வீடியோவும் உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவே இருக்கிறது.

கடலே., கரையே, மனமே., குணமே., நிலமே., குளமே., இடமே., தடமே என்ற வரிகள் நம்மை பாடலுக்குள் மிதக்கச் செய்கிறது. பாட்டன் பூட்டன் காத்த பூமி., ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி ., ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவக் கூவுச்சி… அதுபோட்டு வச்ச எச்சந்தானே காடா மாறிச்சி., நம்ம நாடா மாறிச்சி., இந்த வீடா மாறிச்சி என்ற வரிகள் நம்மை கண்விழிக்க செய்து புல்லரிக்க வைக்கிறது.
தீ என்ற பாடகி ரௌடி பேபி பாடலை பாடியவர், இவர் பலரின் மனம்கவர்ந்த சந்தோஷ் நாராயணன் மகள் என்றாலும் இவர் வாரிசு ரீதியாக வந்தார் என்று கூற முடியாது. காரணம், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற வரிகளையும் பெற்றவர் 10 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பதையும் தனது குரலின் மூலமாக தீ நிரூபித்திருக்கிறார்.
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிற வகையில் இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை தோழர் அறிவு எழுதியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் மாஜா தளம் இந்த பாடலை தயாரித்திருக்கிறது. அமித் கிருஷ்ணன் இந்த பாடலை படமாக்கியிருக்கிறார்.
யூடியூப் தளத்தில் வெளியாகும் சராசரி பாடல் போல் வெளியானாலும் இது அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. என்ஜாய் எஞ்சாமி என தொடங்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் ஒரு வகையான விஷுவல் காண்பிக்கப்படுகிறது. நெஞ்சில் வருடும் விஷயம் ஏதோ இந்த பாடலில் இருக்கிறது என்றே கூறும் அளவிற்கு இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. மார்ச் 7 ஆம் தேதி வெளியான இந்த பாடலுக்கான பார்வையாளர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
#EnjoyEnjaami #Enjoy #Enjaami #Songs