தமிழ் சினிமாவில் ஒரு சுதந்திர இசைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. சுதந்திர இசைக் கலைஞராக இருந்த இவர் குறுகிய காலகட்டத்திற்குள் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அவதாரம் எடுத்துள்ளார்.
கிளப்புல மாப்புள்ள, இறைவா, கற்பிப்போம், செந்தமிழ் பெண்ணே உள்ளிட்ட 12 பாடல்களை கொண்ட ஹிப் ஹாப் தமிழன் என்ற இசை ஆல்பத்தை 2012இல் உருவாக்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.

பின்னர் ராப் பாடகராக அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய இவர் 2015இல் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார்.
இதையடுத்து 2017இல் சுந்தர் சி தயாரிப்பில் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, நான் சிரித்தால் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஹிப் ஹாப் தமிழன் இசை ஆல்பத்தை தொடர்ந்து இவரது இசையில் உருவாகியுள்ள நான் ஒரு ஏலியன் இசை ஆல்பத்தின் நெட்ட தொறந்தா பாடல் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியானது.
சமூகவலை தளங்களில் இருக்கும் எதிர்மறை கருத்துக்கள், குறித்தும் மனிதத்தின் முக்கியத்துவம் குறித்தும் வேற்றுகிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் பாடியதைப் போல் இப்பாடல் அமைந்திருந்தது. திங்க் மியூசிக் வழங்கிய இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன.
ஏற்கனவே நெட்ட தொறந்தா பாடல் யூ-ட்யூப்பில் ஆறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஆல்பத்தில் மீதமுள்ள டார்க் லாட்ஸ், இணையம், எல்லாமே கொஞ்ச காலம், போகட்டும் போகட்டும் போ, யாருமே வேணா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.