வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட நினைத்து ஒரு வீட்டுக்குள் பலர் மாட்டிக் கொள்கின்றனர்.
அவர்களுக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வெப் சீரிஸ் என்பதால் கதை கொஞ்சம் நீளமாக உள்ளது. குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நிதானமாக நன்றாகவே நடித்துள்ளார். காஜல் அகர்வால், வைபவ், ஆனந்தி, டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிகரெட் உடன் வரும் காஜல் அகர்வால், கெட்ட வார்த்தை, நிர்வான குளியல் என ஓடிடி தொடருக்கு தேவையான அனைத்தும் பஞ்சமில்லாமல் புகுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் வெங்கட்பிரபு படத்தில் பிரேம்ஜி இல்லாமல் இருப்பாரா. பிரேம்ஜி சிறிது காட்சியிலும், இந்த தொடருக்கு பின்னணி இசையும் வழங்கியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் இந்த தொடரில் நடித்த அனுபவம் குறித்து கூறியதை பார்க்கலாம். இந்த தொடருக்கு ஏற்ற படப்பிடிப்பு தளத்தை தேர்ந்தெடுத்தோம். மலை உச்சியில் இருக்கும் தனி வீடு அது. படப்பிடிப்புக்கு பிறகும் அந்த இடம் நிசப்தமான அமைதியோடு அச்சத்தை கொடுத்தது. எங்களால் தூங்க முடியவில்லை. அந்த சூழ்நிலைகளில் இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது என கூறினார்.