நடிகர் விஜய் மற்றும் சங்கீதா அவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் நலத்திட்டங்கள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் போஸ்டர்கள் மூலமாகவும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் ஒருபகுதியாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சிதலைவர் விஜய் என்றும் புரட்சித்தலைவி சங்கீதா என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் விஜயின் உருவப்படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரித்தும் அவரது மனைவி சங்கீதாவின் உருவப்படத்தை ஜெயலலிதாவாக சித்தரித்தும் ஒட்டப்பட்டிருந்தது. இது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இதுநாள் வரை நடிகர் விஜய்யை அரசியல் வரவை அவரது ரசிகர்களும் சில அரசியல் பிரமுகர்கலும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவி சங்கீதாவையும் அரசியலுக்கு வரவேற்கும்படியான இந்த போஸ்டர் பலரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜயை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார். அதில் விஜய் ரசிகர்கள் சின்ன பிள்ளைகள், விஜய் தமிழர் நல்ல நடிகர் அவ்வளவுதான் என கூறினார்.
விஜய் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர், அம்மா மீது ஈர்ப்பு உள்ளதை இந்த போஸ்டர் காட்டுகிறது என கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.