முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம் தொடர்பான கேள்விகளும், சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

அதில் முக்கியமானது நார்மல் ரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதுதான். பொதுவாக இதயம் சுருங்கும்போது 120 மி.மி மெர்க்குரி அளவும், விரியும்போது 80 மி.மி. மெர்க்குரி அளவும் இருந்தால், அது நார்மல் ரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. ஆனால், இது எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
நார்மல் ரத்த அழுத்தம் என்பது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிடைக்க பெற்ற தரவுகளிலிருந்து, அல்லது மருத்துவ அறிஞர்களின் நம்பிக்கைகளிலிருந்து எழுந்திருக்கக்கூடும் என்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் மூத்த அறிவியல் ஆலோசகர் ஜெஃப்ரி கட்லர் கூறுகிறார். மேலும், நார்மல் ரத்து அழுத்தம் என்பது பாலினம், வயது, உயரம், எடைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் வேறுபடும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ரத்த அழுத்தம் என்பது உடலில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, உறங்கும்போது என நமது உடலின் நிலைக்கு ஏற்ப ரத்த அழுத்தம் அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்.
மேலும், மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு தகுந்தவாறும் ரத்த அழுத்த அளவுகளில் வித்தியாசம் இருக்கும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பிரசவத்திற்கு பிறகு இது இயல்பு நிலையை திருப்பிவிடும். எனவே, ஒரு முறை மட்டும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து விட்டு, பி.பி. உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது என்றும், இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் பரிசோதிப்பதே சிறந்தது எனவும், கூறுகின்றனர் மருத்துவ அறிஞர்கள்.