கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி, கல்லூரிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்து பொது மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டது. இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு உடற்பிற்சி கூடங்களைத் திறக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிம் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முதலில் ஜிம் செல்வதற்கு முன் உங்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில், வியர்வை துடைப்பதற்கான துண்டு, கையுறை மற்றும் தேவைப்படும் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் உள்ளதா என்பதை ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்த பின் செல்லுங்கள்.
ஜிம்மிற்கு சென்றபின் அங்குள்ள நுழைவு வாயில் கூட்ட நெரிசலாக இருந்தால் வண்டியிலேயே காத்திருந்த அதன் பின்னர் உள்ளே செல்லலாம். ஜிம்மில் உள்ள கருவிகளை பயன்படுத்தும் போது அவசியம் கையுறை போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் கருவிகளை பலர் பயன்படுத்தி இருப்பார்கள். அதுமட்டுமல்லாது மருத்துவர்களிடம் பரிந்துரைகளை பெற்ற பின் தேவைப்பட்டால் முகக் கவசம் அணிந்து உடற்பயிற்சி மேற்கொள்வதும் சிறந்தது.
அதற்கு பின் மிகவும் முக்கியமானதாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒருவரிடமிருந்து 6 மீ அளவாவது இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜிம்மில் உள்ள கருவிகளை தவிர்த்து அங்குள்ள வேறு எந்த பொருளையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த நடைமுறைகளை பின்பற்றி வந்தால் எந்த ஒரு அச்சமும் இன்றி ஒருவர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.