கொரோனா இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் பரவல் காரணமாக ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகள் போதாமல் பள்ளி கல்லூரிகள் கொரோனா வார்டாக மாற்றும் நிலை ஏற்பட்டு வருகிறது.
நோய் பரவல் காரணமாக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. சில பள்ளி கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் என்பது கிராமப் பகுதிகள், இன்டெர்னெட் வசதி, ஆன்லைன் வகுப்புகளுக்கான சாதனங்கள் இல்லாத மாணவர்களின் நிலையை கவலைக்கிடமாக மாற்றியுள்ளது.
அதேபோல் திடீரென ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களிடம் திணிப்பது என்பது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாகவே உள்ளது என பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திர மாநில பள்ளிக் கல்வித் துறை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதித்து அறிவித்ததோடு, ஆகஸ்ட் 3 மூன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவித்தது. இதற்கான வியூகங்கள் வகுப்பப்பட்டு வந்த நிலையில் அதன் வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வருகிற 13 ஆம் தேதி முதலே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது.
இதற்கான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சின்னவீரபத்திருடு வெளியிட்டார். பள்ளிக்கல்வித் துறையின் வியூகம் குறித்து பார்க்கையில் இந்த முறையை ப்ரிட்ஜ் கோர்ஸ்கள் என்றதன் அடிப்படையில் மாணவர்களை ஆன்லைன் ஆஃப்லைன் என இருவிதமாக பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கைகள் வரையறுக்குப்பட்டுள்ளது.
இதில் தொடக்கப்பள்ளிகள் வாரத்திற்கு ஒரு நாள் இயங்கலாம் எனவும் நடுநிலை பள்ளிகள், உயர் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் வாரத்திற்கு 2 நாட்கள் இயங்கலாம் எனவும் உத்தரவிட்டுருக்கிறது. அதோடு இதற்கான பணியில் ஈடுபடுவதற்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூலை 10 ஆம் தேதிக்குள் தயாராகும்படியும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்த வியூகம் முறையாக செயல்படுத்தப்பட்டு ஆந்திர மாநிலம் வெற்றிக்கண்டால் பிற மாநிலங்களும் இந்த முறையை பின்பற்ற வாய்ப்பிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.