கொரோனா நோயாளிகளை மோப்ப நாய்கள் கண்டறியும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு அதற்கான சோதனையில் மோப்ப நாய்கள் கொரோனா தொற்றாளர்களை துல்லியமாக கண்டறிந்துள்ளது.
பொதுவாக குற்றங்களை கண்டுபிடிப்பதில் போலீஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்கள் பெரும் பங்கு வகித்துள்ளது. ஏணைய குற்றங்களும், மிரட்டல்களும் மோப்ப நாய்களால் தகர்த்தப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேவைபுரியும் மோப்ப நாய்களை கே-9 என அழைப்பார்கள்.
பல்வேறு நாடுகளிலும் மோப்ப நாய்களுக்கு தனி பிரிவே உள்ளது. இந்த நாய் படைகளை தயார் செய்வதற்கு ஏணைய வகையில் முக்கியத்துவமும் வழங்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே மோப்ப சக்தி மிகுந்த விலங்குகளில் ஒன்று நாய்தான். மோப்ப சக்தி மனிதர்களோடு ஒப்பிடுகையில் 10 லட்சம் மடங்கு துல்லியமானவையாக இருக்கும். பல கலவைப் பொருட்களை வைத்தாலும் மோப்ப நாய்கள் தனித்து மோப்பம் பிடிக்கும் திறன் உள்ளது. போதை பொருட்களை எதில் கலந்து வைத்தாலும் இப்படி தான் மோப்ப நாய்கள் கண்டறிகிறது.
மோப்ப நாய், தேடல் நாய், வேட்டை நாய், வலிப்பு நோயாளிகளுக்கு உதவும் நாய் என பல்வேறு வகை பிரிவுகளில் நாய்கள் பாதுகாப்பு படையினருக்கு சேவையாற்றி வருகிறது. இதில் மோப்ப நாய்களுக்கு அதன் மோப்பச் சக்தியால் மனிதர்களின் உடலில் வெவ்வேறு தருணங்களில் சுரக்கும் ஹார்மோன்களின் துல்லிய வாசனையை நுகர்ந்து செயல்படுவதே ஆகும்.
தற்போது மோப்ப நாய் படைகளில் லேப்ரடர், ஜெர்மன் செப்பர்ட் போன்ற உயர் வகை நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய்கள் குறிப்பிட்ட வாசனையை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவைகள். இந்த நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டறிய பிரான்ஸ் நாட்டு கால்நடை மையத்தின் உதவியுடன் அமீரக உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனை, பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அமீரகத்தின் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளிலும் கே-9 மோப்ப நாய்கள் சேவை புரிகிறது. இதில் கொரோனா தொற்று உள்ள பொருட்களை மோப்பம் பிடிக்க சிறப்பு உபகரணங்கள் மூலம் மோப்ப நாய்களக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதோடு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கப்படும் தற்காலிக மருத்துவமனையில் மோப்ப நாய் மூலம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
மனித உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, வாசனை போன்றவற்றை வைத்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என மோப்ப நாய்கள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமீரக சுகாதார அமைச்சகம், சுங்கத்துறை, அபுதாபி, துபாய் சுகாதார ஆணையங்கள், வணிக வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.