ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடலில் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய கொடிய விஷம் இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி. இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன் எடுத்து வருகிறார். நீண்ட நெடிய ஆட்சிக்காலம், எதிர் கருத்துக்களை நசுக்குதல் போன்ற புதினின் சர்வாதிகார போக்கை அழிக்க போராடி வருகிறார். இதனால், அவர் பல முறை கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ரஷ்யாவின் சைபிரியாவில் இருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவல்னி மாஸ்கோ புறப்பட்டார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. சைபிரியாவில் உள்ள மருத்துவமனையில் நவல்னி அனுமதிக்கப்பட்டார்.
சைபிரியா மருத்துவமனையில் நவல்னியின் உடல்நலம் மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சாரிட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அலெக்ஸி நவல்னி உடலில் கொடிய விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஜெர்மனி அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், “நவல்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கி, நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கக்கூடிய நோவிசோக் என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்கு ரஷ்ய அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது
[/vc_column_text][/vc_column][/vc_row]