டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது.
மற்ற பாஜக தலைவர்களை போலவே சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸில் தன்னை இணைத்து கொண்டு படிப்படியாக முன்னேறி, பிரதமர் அரியணையை அலங்கரித்தவர் நரேந்திர மோடி. அரசியலில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க, அந்தந்த காலக்கட்டங்களில் நிலவும் டிரெண்டுக்கு ஏற்ப தன்னே தானே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நங்கு அறிந்தவர் அவர். இதற்கு ஏற்ப இளைய டிஜிட்டல் தலைமுறையை தன்வசம் ஈர்க்க, 2009ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது டுவிட்டரில் கணக்கு தொடங்கினார்.
2014ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது புகழ் வேகமாக பரவியது. உலகளவில் பேசப்படும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி மாறினார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க, டிஜிட்டல் இந்தியாவை முன்மொழிந்த பிரதமர் மோடி, ஆட்சியிலும் டிஜிட்டல் முறையை புகுத்தினார். சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு போன்ற முக்கிய அமைச்சர்கள் டுவிட்டர் மூலம் ஆட்சியே நடத்தினார்கள். இவை அனைத்தையும் அதுவரை வேடிக்கை பார்த்து வந்த ராகுல் காந்தி 2015ம் ஆண்டில் டுவிட்டர் தளத்தில் கணக்கு தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, அதிகாரபூர்வ அறிவிப்புகள், தகவல்களை தெரிவிக்க டுவிட்டர் முக்கியமான தளமாக மாறியது.
2014ம் ஆண்டில் டிஜிட்டல் ஆட்சிக்கு போடப்பட்ட அடித்தளம், கொரோனா காலத்தில் பெருமளவு உதவுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. ரேஷன் பொருட்கள், சிறப்பு அனுமதிகள், சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற டுவிட்டர் தளம் மூலம் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியை பொதுமக்கள் நாடுகின்றனர். இதுவரை பல கட்ட போராட்டங்களுக்கு பின்னும் அதிகாரிகள், தலைவர்களின் செவிக்கு செல்லாத புகார்கள், டுவிட்டரில் ஒரு சிறிய டுவீட் மூலம் எளிதில் சென்றடைகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் இதற்கு அஸ்திவாரம் போட்ட பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. டுவிட்டரில் அதிகம் பின்தொடரப்பட்டும் இந்தியராக பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். உலகளவில் டுவிட்டர் கணக்கில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 3ஆம் இடத்தில் உள்ளார். இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதல் இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மேலும், டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி 2 ஆயிரம் 355 பேரை பின்தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது