வேளாண் மசோதாக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக திடீர் பல்டி அடித்துள்ளது.
வேளாண் துறையை சீரமைக்க மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 3 அவசர சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக அவரச சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத உடன்பாடு மற்றும் விவசாய பணிகள் அவரச சட்டம், அத்தியவசிய பொருள்கள் சட்ட திருத்த அவரச சட்டம் ஆகியவை விவசாய துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்தது. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளின் தொடர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேறியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்தது.
இந்த மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.
ஆனால், இந்த மசோதாக்களால், விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.
இந்த மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வாக்களித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக திடீர் பல்டி அடித்தது. வேளாண் மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், “இந்த மசோதாக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த மசோதாக்கள் மூலம், பதுக்கல், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை ஏற்படும். மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
விவாதத்திற்கு பிறகு விவசாயிகள் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.