மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அனல் பறக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை, தனது எளிமையின் மூலம் 2011ல் கைப்பற்றினார் மம்தா. அரசியலில் இன்றளவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள பெண் தலைவர்களில் எளிமையால் ஆளுமையான சிலரில் இவரும் ஒருவர். எந்த பிரச்சனை என்றாலும், களத்தில் நின்று சண்டை செய்வது இவரின் தனித்துவமாகும். குறிப்பாக, சிங்கூர் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று போராடியதே, 2011ல் மம்தாவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
திமுகவை போல், வாஜ்பாய் காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், தற்போது பிரதமர் மோடியை எதிர்ப்பதில், மாநிலத்தில் மம்தா முன்னின்று செயல்பட்டு வருகிறார். 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த இடதுசாரிகள், மற்றும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
2019 மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸை விட பாஜக, வெறும் 3% வாக்குகள்தான் குறைவாக பெற்றிருந்தது. 2014ல் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த பாஜகவின் இந்த அசூர வளர்ச்சி திரிணாமூல் காங்கிரஸை அசைத்துள்ளது. இதுவே, இடதுசாரிகளை கடுமையாக எதிர்த்து வந்த மம்தா பானர்ஜியை பாஜகவை எதிர்க்க வைத்தது. இது அவர் சமீபத்திய நடவடிக்கைகளில் கண்கூடாக பார்க்கவும் முடிகிறது.
மேற்கு வங்கத்தில் இந்தி பேசும் மக்களை வெளியாட்கள் என்று கூறி வந்த மம்தா பானர்ஜி தற்போது, கட்சியில் செயலற்ற கிடந்த இந்தி பிரிவை தூசி தட்டி புதுப்பித்திருக்கிறார். மதம் மற்றும் மொழி சார்ந்த பிரிவினையை ஏற்படுத்தி, பாஜக அரசியல் அறுவடை செய்துவிடக் கூடாது என்பதில், மம்தா பானர்ஜி கவனமாக இருக்கிறார்.
பாஜகவின் பலம் அதிகரித்துவரும் நிலையில், பாஜக மீது கூர்மையான தாக்குதல்களை மம்தா முன்னெடுத்து வருகிறார . குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி கலவரம், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடிப்பது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பாஜகவைக் கடுமையாகச் சாடி வருகிறார்.
அந்த வகையில், மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போதும் உச்சத்தை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம் செய்தபோது, அவரது கார் தாக்கப்பட்ட சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான வார்த்தை போரை அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜகவும், தாக்குதலை தூண்டியதே பாஜகதான் என திரிணாமூல் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன.
இந்த மோதலுக்கு கூடுதல் அனல் சேர்க்கும் வகையில், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மம்தா பானர்ஜியை படுகொலை செய்யவும் பாஜக தயங்காது என மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அனுதாப வாக்குகளை குறிவைத்து திரிணாமூல் காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக பாஜக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தொடர் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் மேற்கு வங்க அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.