காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா பழக்க தோஷத்தில் காங்கிரஸின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ-க்களுடன் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். இதனால், அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இழந்ததால் காங்கிரஸின் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்த பெரிய கட்சியான பாஜக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது.
இதைத்தொடர்ந்து, மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை நடைபெறும் இத்தேர்தல் மினி சட்டப்பேரவை தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இதனால், பிரச்சாரங்களும் படு தீவரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், டப்ரா தொகுதியில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இமர்தி தேவியை ஆதரித்து பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, “எனது டாப்ரா மக்களே, உங்கள் கைகளை உயர்த்தி வரும் 3ம் தேதியன்று கை சின்னத்துக்குதான் வாக்களிப்பீர்கள் என்பதை என்னிடமும், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடமும் உறுதி படுத்துங்கள்” என்று கூறினார்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை சுதாரித்துக் கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா உடனடியாக தனது தவறை திருத்திக் கொண்டார். பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வீடியோவை அம்மாநில காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “மத்தியப்பிரதேச மக்கள் வரும் 3ம் தேதி காங்கிரஸுக்கு தான் வாக்களிப்போம் என உங்களிடம் உறுதியளித்துள்ளனர்” என கிண்டலடித்துள்ளது.