நாட்டின் ஜனநாயக வரலாற்றை ஒவ்வொரு மூலையிலும் காண முடிகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் தேசிய சின்னங்களை மையமாக கொண்டு கட்டப்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 384 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது.
இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி, பூமிபூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நாட்டின் ஜனநாயக வரலாற்றை ஒவ்வொரு மூலையிலும் காண முடிகிறது.
சோழர் ஆட்சிக் காலத்தில் தேர்தல் நடைமுறை இருந்தது. சென்னை அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரமேரூரில் வரலாற்று சான்று கிடைத்துள்ளது. அங்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு, மக்களே தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும் உத்தரமேரூர் கல்வெட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.