பிரதமர் நரேந்திர மோடியின் முகநூல் பக்கத்தை விட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பக்கம் அதிக கருத்துகள், விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளை பெற்று இருக்கிறது.
சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் செலுத்தும் தலைவர்களில் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி. மற்ற தலைவர்களை காட்டிலும் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால், முகநூல், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, டுவிட்டரில் 6.28 கோடி பேரும், முகநூலில் 4.59 கோடி பேரும் பிரதமர் மோடியை பின்தொடர்ந்து வருகின்றனர். மோடியை காட்டிலும் 10ல் ஒரு பங்கு பின்தொடர்பவர்கள் கூட ராகுல் காந்திக்கு இல்லை. முகநூலில் ராகுல் காந்தியை வெறும் 35 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முகநூல் பக்கத்தை விட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பக்கம் அதிக கருத்துகள், விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளை பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மோடியை காட்டிலும், ராகுல் காந்தியின் முகநூல் பக்கம் 40% அதிக கருத்துகள், விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளை பெற்றுள்ளது.
“கடந்த வாரம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது ஹத்ராஸ் சம்பவம். இது குறித்து பிரதமர் மோடி ஒரு பதிவை கூட போடவில்லை. ஆனால், ராகுல் காந்தி காங்கிரஸின் போராட்டங்களை முன் இருந்து வழிநடத்தினார். இது குறித்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இதனால், நரேந்திர மோடியை விட மிகக் குறைவான பின்தொடர்பவர்கள் இருந்தாலும், ராகுல் காந்தியின் பக்கத்தல் அதிக மக்கள் தொடர்பு ஏற்பட்டுள்ளது” என்று தகவல் தொடர்பு ஆலோசகர் திலீப் செரியன்
கூறியுள்ளார்.