விவசாயிகள் விரோத மசோதாக்களை கண்டித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடும் சரிவில் சென்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, வேளாண் துறையில் சில சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயம் தொடர்பான இந்த நடவடிக்கைகள் 1991 பொருளாதார தாராளமயமாக்கலுடன் ஒப்பிடப்பட்டது.
விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக அவரச சட்டம், சந்தை பகுதிக்கு வெளியே விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வழிவகை செய்துள்ளது. விவசாயிகள் விலை உத்தரவாத உடன்பாடு மற்றும் விவசாய பணிகள் அவரச சட்டம், ஒப்பந்த விவசாய விதிகளை ஒழுங்குபடுத்துகிறது. கார்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து விவசாயம் செய்வதை ஊக்குவிக்கிறது. அத்தியவசிய பொருள்கள் சட்ட திருத்த அவரச சட்டம், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், கார்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. சந்தைக்கு வெளியே விற்பனை செய்யும் போது விவசாய விளைபொருட்களுக்கு அரசு தற்போது வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும், சந்தை முறையை ஒழிக்கப்படுவதன் மூலம், சந்தைகளில் பணியாற்றும் தொழிலாளர், இடைத்தரகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இரு மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பயதை அடுத்து, இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், இந்த மூன்று அவசர சட்டங்களுக்கும் இதே சிரோமணி அகாலி தளம் முன்னதாக ஆதரவு தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
Attachments area