அனைவருக்கும் தடுப்பூசி? அப்படி ஒருபோதும் சொல்லவில்லையே: மத்திய அரசு
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் சொல்லவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
கொரோனா கோரப் படியில் இருந்து மீள உலக நாடுகள் போராடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளவில் சில தடுப்பூசிகள் நல்ல பலன் அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில், நாட்டில் யார் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “ மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நோக்கம், கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான்.
குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு, வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்,”அறிவியல் சிக்கல்களை உண்மை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பது முக்கியம். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் சொல்லவில்லை. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி அரசு ஒருபோதும் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.