புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து விடலாம் என்று கருதி முதலமைச்சர் நாராயணசாமி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் கோப்புகளைத் தயார் செய்து துணை நிலை ஆளுநரிடம் சமர்பித்தும் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பின் தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் ஒப்புதலை பெற்று இன்று புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதில் துணை நிலை ஆளுநர் கிரன்பேடி பங்கேற்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலும் அந்த மாநிலம் அல்லது யுனியன் பிரதேசத்தின் ஆளுநரின் உரையுடன் தொடங்கும். ஆனால் முதன் முறையாக இது வேறுபட்டு இருக்கிறது.
இன்று புதுச்சேரி சட்டப்பேரவை காலை 10:30 மணிக்கு கூடியது. மாநில ஆளுநரின் வருகைக்காக 15 நிமிடங்கள் காத்திருந்தனர் இருப்பினும் அவர் வராததால் முதலமைச்சரும் நிதி அமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 9 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முக்கிய அம்சங்களாக இலவச காலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில் இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை இடம் பெற்றிருக்கும். இந்த திட்டத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு 100 யுனிட் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு இலவச விண்ணப்பம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
இதற்கிடையே ஆளுநர் இன்றி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர்.