கருப்பு, சிவப்பு சட்டை: ஸ்டாலின் வீட்டில் எஸ்.வி.சேகர் – பின்னணி என்ன?
பாஜகவின் எஸ்.வி.சேகர் திடீரென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருபவர் எஸ்.வி சேகர். இந்தநிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, எஸ்.வி.சேகர் நேற்று திடீரென சந்தித்தார். அப்போது, உதயநிதிக்கு எஸ்.வி.சேகர் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எஸ்.வி.சேகர் திமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. திமுக வேட்பாளராக அவர் போட்டியிட போகும் தொகுதி மயிலாப்பூர்தான் என்று கூட யூகங்கள் கிளம்பின. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூரில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், எஸ்.வி.சேகர் தொடர்பான தகவல் அசுர வேகத்தில் பரப்பப்பட்டது.
இதனிடையே, இது குறித்து விளக்கமளித்த எஸ்.வி.சேகர், “அண்மையில், 2020-22ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடந்தது. அதில், தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். அந்தக் குழுவுக்கு ஓர் ஆலோசகர்போல் நான் செயல்பட்டேன்.
வெற்றி பெற்றவுடன், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அந்த அணியினர் சந்திக்கச் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்
நாங்கள் சென்ற பிறகுதான் தெரிந்தது, இன்று உதயநிதியின் பிறந்தநாள் என்று. வாழ்த்துகளைச் சொன்னோம். அவருடன் ஒரு படமும் நடிக்கிறேன். ஹீரோவுக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நண்பர்கள்தான், யாரும் எதிரியல்ல”, என்று கூறினார்.