டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் எஸ்.ஆா்.பி. மைதானத்தில் நடைபெறும் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதேபோல், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு மயிலாடுதுறையிலும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சியிலும் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இந்த போராட்டத்திற்காக, மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை செல்கிறார். அதன் பிறகு, கார் மூலமாக சேலம் செல்கிறாா்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலத்தை குறிவைத்து திமுக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் முதலமைச்சரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், வேளாண் சட்டங்களை எதிர்த்து ஸ்டாலின் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட உள்ளது, குறிப்பிடத்தக்கது.