சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது மேடையில் பேசிய தயாநிதி மாறன், “மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் “, என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தயாநிதி மாறன் சொன்னதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கில்லை. அந்த தகுதி தலைவருக்கும் தமிழக மக்களுக்குமே உள்ளது. திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அவ்வழியே செயல்படுவோம்”, என்று கூறினார்.
இந்த விவகாரத்தை புரிந்து கொள்ள சில நாட்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். கழக மற்றும் மக்கள் பணிகளை சிறப்பாக ஆற்றி வந்த சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா காலத்திலும் பம்பரமாக சுழன்று கள பணிகளில் ஈடுபட்ட அவரது மறைவு கழக உடன்பிறப்புகள் மற்றும் தொகுதி மக்களிடையே நீங்கா துயரை ஏற்படுத்தியது.
அன்பழகன் மறைவுக்கு பிறகு, அவர் வகித்து வந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி உதயநிதியின் விசுவாசி சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியை குறிவைத்துதான், உதயநிதியின் சிபாரிசு மூலம் சிற்றரசுக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. மக்கள் செல்வாக்கு உடைய அன்பழகன் மறைவால் கிடைக்கும் அனுதாப ஓட்டுகளை கைப்பற்றவே காய் நகர்த்தல்கள் நடைபெற்று வருவதாகவும் பேசப்பட்டது.
இது மட்டுமின்றி கருணாநிதி கடந்த இரு முறை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுதான் முதலமைச்சர் அரியணையை அலங்கரித்தார். இதனால், உணர்ச்சிபூர்வமாகவும் உதயநிதி தனது முதல் தேர்தலை சேப்பாக்கத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கழக உடன்பிறப்புகள் மத்தியில் நிலவுகிறது. இந்தநிலையில், இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.