வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட போவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் முக்கியமானது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர வைக்கப்பட்ட திமுக, தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த சூழலில், தாங்கள் வெற்றி பெறுகிறோமோ, இல்லையோ திமுக வெற்றி பெற கூடாது என பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றன.
2016 தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றும் திமுக தோல்வியை தழுவியது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகளும் முக்கியமான ஒன்று. நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அணுகுமுறை, இரு பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்பு போன்ற கொள்கைகள் இளம் தலைமுறை வெகுவாக கவர்ந்துள்ளது.
2019 மக்களவை தேர்தலில் அதிமுகவை விட்டுவிட்டு, திமுகவை நாம் தமிழர் கட்சி உரித்து எடுத்தது. பெரும்பாலான சீமானின் பிரச்சாரங்கள் திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிராகவே அமைந்திருந்தன. இதனால், நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது மீண்டும் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் சீமான் குறிவைத்துள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள், நானும் அதையே நினைக்கிறேன்” என்றார்.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 12,000 வாக்குகளை கைப்பற்றினார். இம்முறை காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
Read Tamil Nadu Political News
தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால், முக்கிய தலைவர்கள் சிறிய மற்றும் எளிய தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில், கொளத்தூர் தொகுதி சிறிய மற்றும் ஸ்டாலினின் செல்ல தொகுதி.
கொளத்தூரில் சீமான் போட்டியிட்டால், தொகுதிக்குள் ஸ்டாலின் அதிகளவில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இது மற்ற தொகுதிகளுக்கான பிரச்சார பயணங்களை குறைக்கும். திமுகவின் வெற்றி வாய்ப்புகளையும் பாதிக்கும். இந்த சூழலில், வழக்கத்துக்கு மாறாக சீமான், ஸ்டாலின் தொகுதியில் போட்டியிட்டால், அது திமுகவை ஆட்டி பார்க்கும் என்பதே நிதர்சனமான உண்மை.