கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியானது. மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் களம் காண்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

2019 மக்களவை தேர்தலில், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றது. இதன் அடிப்படையில், அவரது சாதியை சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர், அல்லது எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய ஆலந்தூர் (பரங்கிமலை) தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று பேசப்பட்டது.
ஆனால், அவ்விரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேரடியாக களமிறங்குகின்றனர். ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வளர்மதி களமிறக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல், மயிலாப்பூரில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நடராஜனும், திமுக சார்பில் டி.வேலுவும் களம் காண்கின்றனர். இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் என்பதால், கமல்ஹாசனுக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்று கருதப்பட்டதாக தெரிகிறது.
இதனால், கோவையை நோக்கி கமல்ஹாசன் சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கமல்ஹாசன் போட்டியிட உள்ள கோவை தெற்கு தொகுதி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு கொங்கில் கமல்ஹாசன் களமிறங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.